ரீல்ஸ் ஆசையில் ரயிலை நிறுத்திய மாணவர்கள்… அதிர்ச்சி!
கேரள மாநிலம் கண்ணூர் அருகே நேற்று அதிகாலை திடுக்கிடும் சம்பவம் நடந்தது. எர்ணாகுளத்தில் இருந்து புனே நோக்கி சென்ற ஓகா எக்ஸ்பிரஸ், தலைச்சேரி–மாகி இடையே சென்றபோது தண்டவாள ஓரத்தில் நின்ற இருவர் திடீரென சிவப்பு விளக்கை காட்டினர். ஆபத்து என கருதி இன்ஜின் டிரைவர் அவசரமாக பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார்.
நடுவழியில் ரயில் நின்றதால் பயணிகள் பெரும் பரபரப்புக்கு உள்ளானார்கள். இன்ஜின் டிரைவர் கீழே இறங்கி விசாரித்தபோது, ரயிலை நிறுத்தியது இரண்டு சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ எடுக்கவே சிவப்பு விளக்கு காட்டியதாக அவர்கள் அலட்சியமாக கூறியதும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த கண்ணூர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், அந்த மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் 12-ம் வகுப்பு மாணவர்கள் என்பது உறுதியானது. கடும் தண்டனைக்குரிய செயல் என்றாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எச்சரித்து, பெற்றோர்களை அழைத்து கண்டித்து அனுப்பினர். சில வினாடி புகழுக்காக ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பை ஆபத்துக்கு உள்ளாக்கும் போக்கு அதிகரிப்பது அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
