மீண்டும் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு.!
இந்தியா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணி அமெரிக்காவின் விண்வெளி பயண நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நாசாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்கும்.

இருப்பினும், இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை அனுப்பும் இந்த பயணத்தின் ஏவுதல் திட்டம் 3 வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அதன்படி, அடுத்தகட்ட ஏவுதல் வானிலை காரணமாக நாளை ஜூன் 11 மாலை 5.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த பணி முதலில் மே 29 அன்று தொடங்க திட்டமிடப்பட்டது. பின்னர் ஜூன் 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஏவுதல் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இருப்பினும், இன்றும் நடைபெறவிருந்த மோசமான வானிலை காரணமாக அதன் ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஒத்திவைப்பு, ஒரு சிறிய பின்னடைவாக இருந்தாலும், விண்வெளிப் பயணத்தின் சிக்கல்களையும், ஏவுதள நடவடிக்கைகளில் வானிலையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

இந்தியாவின் விண்வெளி லட்சியங்களுக்கான ஒரு முக்கிய நிகழ்வான இந்த பணி, ஆக்சியம் ஸ்பேஸ், நாசா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டு முயற்சியாக கருதப்படுகிறது. ராகேஷ் சர்மாவின் வரலாற்று சிறப்புமிக்க 1984 பயணத்திற்குப் பிறகு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா மனித விண்வெளிப் பயணத்திற்குத் திரும்புவதை இது குறிக்கிறது.
Axiom-4 விண்கலத்தின் கீழ் முதல் முறையாக, ஒரு இந்திய விண்வெளி வீரரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் திட்டம் இதுவாகும். இந்தியாவிலிருந்து விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் பிறந்த சுபன்ஷு சுக்லா, 2019ம் ஆண்டில், சுபன்ஷு சுக்லா விங் கமாண்டர் பதவியை அடைந்து வரலாறு படைத்துள்ளார். போர் விமானங்களில் அவருக்கு 2000 மணி நேரத்திற்கும் மேலான அனுபவம் உள்ளது. மிக்-21, எஸ்யூ-30 எம்கேஐ, டோர்னியர், மிக்-29, ஜாகுவார், ஹாக், ஏஎன்-32 உட்பட பல வகையான விமானங்களை அவர் ஓட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
