பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்.. 3 ராணுவ வீரர்கள் பலி!!
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் ராணுவத் தலைமையகத்தை குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், இதற்குப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கும், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை மற்றும் கொள்கை வேறுபாடுகள் காரணமாக மோதல்கள் நீடித்து வருகின்றன. ஆப்கானிஸ்தானை ஆதரிக்கும் பாகிஸ்தான் தெரிக் இ தலீபான் பயங்கரவாதிகள் எல்லையில் தாக்குதல்கள் நடத்தி பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், ஒரு முறை ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு நடத்திய பேச்சுவார்த்தையில், துருக்கியில் இரு நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், ஓரிரு மாதங்களில் இந்த அமைதி ஒப்பந்தம் காலாவதியாகி, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு தொடங்கியது. இம்மாத தொடக்கத்திலேயே, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கார் குண்டு வெடித்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவத் தலைமையகத்தை குறிவைத்து நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

வெடிகுண்டுகளைத் தங்கள் உடலில் கட்டிக்கொண்டு மூன்று பயங்கரவாதிகள் ராணுவத் தளத்திற்குள் புகுந்து தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் உடல் சிதறி இறந்த நிலையில், மூன்று ராணுவ அதிகாரிகளும் பலியாகினர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பாகிஸ்தான் தெரிக் இ தலீபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்தச் சம்பவத்திற்குப் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தனித்தனியாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'பாதுகாப்புப் படையினரின் விரைவான நடவடிக்கை ஒரு பெரிய துயரத்தைத் தடுத்துள்ளது' என்று அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். மேலும், 'இந்தச் சம்பவத்தின் குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்' என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
