இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைக்கிறார்!
வங்கக் கடலில் உருவான 'டித்வா' புயலால் வரலாறு காணாத சேதத்தைச் சந்தித்துள்ள இலங்கைக்குத் தமிழக அரசு சார்பில் இன்று (சனிக்கிழமை) 950 டன் நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து இவை இலங்கைக்குச் செல்கின்றன.
'டித்வா' புயலின் கோரத்தாண்டவத்தால் இலங்கையில் பதுளை கண்டு, நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்தப் பேரழிவால் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்; மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 700-க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகி உள்ளனர். புயல் பாதிப்பால் ஒட்டுமொத்தமாக 14 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஈழத் தமிழர்களும் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

புயலால் உயிரிழந்தவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தார். மேலும், இலங்கை மக்கள் இந்தத் துயரில் இருந்து மீண்டு வரத் தமிழக அரசு துணை நிற்கும் என்றும் நிவாரணப் பொருட்களை வழங்கிட அதிகாரிகள் குழு அமைக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்திருந்தார்.

இன்று தமிழக அரசு சார்பில் மொத்தம் 950 டன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இன்று மதியம் 12 மணியளவில் சென்னைத் துறைமுகத்தில் இருந்து அனுப்பப்படும் பொருட்களில் 10 ஆயிரம் போர்வை, 10 ஆயிரம் துண்டு, 5 ஆயிரம் வேஷ்டி, 5 ஆயிரம் சேலை, 1,000 தார்பாலின் ஆகியவற்றுடன் 650 டன் பருப்பு, சர்க்கரை, பால் பவுடர் ஆகியவை அடங்கும். தூத்துக்குடியில் இருந்து 300 டன் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அனுப்பி வைக்கப்படுகின்றன. சென்னைத் துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களைச் சுமந்து செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
