மாணவி ராஜேஸ்வரியின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
ஐஐடியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமை பெற்றுள்ள ராஜேஸ்வரியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்த செல்வி. ராஜேஸ்வரி, 12ம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், ஜே.இ.இ. நுழைவு தேர்வில் இந்திய அளவில் 417வது இடத்தையும் பிடித்து, ஐஐடியில் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன். மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். தனது தந்தையாரை கடந்த 2024ல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்து பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது. கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

அவரது பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, மாணவி ராஜேஸ்வரியின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், மாணவி ராஜேஸ்வரிக்கான படிப்பு செலவுகளை அதிமுக கட்சியே ஏற்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஐஐடியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். ராஜேஸ்வரி பொறியியல் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐஐடியில் சேர இடம் கிடைத்தது.
கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐஐடியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர் பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், மாணவி ராஜேஸ்வரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் #Salute!
அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் #IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது #DravidianModel அரசு தொடர்ந்து உழைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
