சபரிமலையில் தமிழக பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மற்ற பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025-26-ஆம் ஆண்டுக்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காகக் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது முதல், லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் பெருமாள் (67) என்ற பக்தர், மலையேறிச் செல்லும் வழியில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நடப்பாண்டில் சபரிமலை ஐயப்பனைத் தரிசனம் செய்தவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 25 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீசன் தொடங்கிய ஆரம்ப நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியதால், தேவசம் போர்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்த 'ஸ்பாட் புக்கிங்' வசதியை அதிரடியாகக் குறைத்தது. தினசரி 20,000 ஆக இருந்த நேரடிப் பதிவு எண்ணிக்கையை 5,000 ஆகக் குறைத்ததன் மூலம் கூட்ட நெரிசல் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும், நீண்ட தூரம் வரிசையில் நிற்பது மற்றும் மலை ஏறும் கடினமான பயணத்தால் முதியவர்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் இதுவரை உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலைக்கு வரும் முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மலை ஏறும் போது சீரான இடைவெளியில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம்களை அணுக வேண்டும் என்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தமிழக பக்தரின் இந்த மறைவு, புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள மற்ற பக்தர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
