இலங்கையில் தமிழக மீனவர்கள் கை, கால்களில் விலங்கிட்டு அழைத்துச்சென்ற கொடூரம்!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கைது சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கும் நடவடிக்கைகளும் நடைபெறுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்படுகின்றது. இதனிடையே, இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலும் அடிக்கடி நடைபெற்று வருவது தமிழக மீனவர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தலாக உள்ளது. இதுவரை கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பியும், எந்த பயனும் இல்லையென மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த மாதம் 30-ஆம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 31 மீனவர்கள், நவம்பர் 3ஆம் தேதி இலங்கை எல்லை மீறியதாகக் கூறி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மூன்று விசைப் படகுகளுடன் இவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மாணிக்கவேல் என்ற மீனவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விலங்கிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 31 பேரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது கைகள், கால்களில் விலங்கிட்டு கொண்டுச்செல்லப்பட்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதை படம்பிடித்த பத்திரிகையாளர் மதிவாணனை சிறை அதிகாரிகள் மிரட்டியதோடு, கேமராவைத் தட்டியெறிந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிகிச்சை பெற்று வரும் மாணிக்கவேலின் வீடியோ வெளியானதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. இலங்கை சிறைகளில் தொடர்ச்சியாக கொடுமைக்கு உள்ளாகும் மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
