அமெரிக்க இளைஞரை கரம்பிடித்த தமிழக பெண்.... சைவத்தமிழ் முறைப்படி திருமணம்!

அமெரிக்க என்ஜினீயரை தூத்துக்குடி பெண் காதலித்து கரம்பிடித்தார். சென்னையில் சைவத்தமிழ் முறைப்படி அவர்களது திருமணம் நடந்தது.தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட இளஞ்செழியன் - ஜெயஸ்ரீ தம்பதியின் மகள் அம்ரிதா. குவைத்தில் வசித்து வந்த அம்ரிதா, அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் பி.எஸ். கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். அங்கு மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த திரிஸ்டன் தாவோ என்ற என்ஜினீயரை அவர் காதலித்து வந்தார். இந்த காதலுக்கு இருவரின் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டினர்.
இதனையடுத்து அவர்களது திருமணம் சென்னையில் நேற்று காலை சைவத்தமிழ் மரபுப்படி நடந்தது. இதில் மணமகனின் குடும்பத்தினர் தமிழ் பாரம்பரிய உடைகளான பட்டு வேட்டி-சட்டை, பட்டுச்சேலைகள் அணிந்தபடி கலந்து கொண்டது ரசிக்கும் வகையில் இருந்தது. காதல் திருமணம் செய்த அம்ரிதா கூறுகையில், “முதன்முதலில் அவர் தான் எனக்கு பேப்பரில் எழுதி தன்னுடையக் காதலை வெளிப்படுத்தினார்.
2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எனது சகோதரி தான் எங்கள் காதல் பற்றி எனது தாயாரிடம் தெரிவித்தார். இப்போது எங்களுக்கு திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் அமெரிக்காவில் வீடு வாங்கி இருக்கிறோம். அங்கு செல்லப் பூனைக் குட்டிகளும் வளர்த்து வருகிறோம். அதனுடன் சேர்ந்து எங்கள் வாழ்க்கையை தொடங்குவோம்” என்று கூறினார்.
அமெரிக்க மணமகன் திரிஸ்டன் தாவோ கூறுகையில், "தமிழ் மரபுப்படி திருமணம் முடிந்தது மிகவும் அற்புதமாக இருந்தது. சடங்கு சம்பிரதாயங்கள் சற்று அதிகமாக இருந்தாலும் அவை வேடிக்கையாகவே இருந்தது. நான் தமிழ் பாரம்பரியத்தை மிகவும் நேசிக்கிறேன். தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையை அணிவது எனக்கு சிரமமாக தெரியவில்லை. அது மிகவும் அழகாகவே உள்ளது” என்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!