17 ஆண்டுகளுக்குப் பின் திரும்பினார் தாரிக் ரஹ்மான் - நாடுகடத்தப்பட்ட வாழ்க்கை முடிவு!
டாக்கா: வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகனும், அந்நாட்டின் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளார்.
லண்டனில் இருந்து தனது மனைவி ஜுபைதா ரஹ்மான் மற்றும் மகள் ஜைமா ரஹ்மான் ஆகியோருடன் வந்த தாரிக் ரஹ்மானின் விமானம் சில்ஹெட் விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் அங்கிருந்து டாக்கா சென்றடைந்தது. டாக்காவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். "நாட்டு மக்களுக்காக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது" என்று அவர் தனது முதல் உரையில் குறிப்பிட்டார்.
விமான நிலையத்திலிருந்து நேரடியாக எவர்கேர் மருத்துவமனைக்குச் சென்ற அவர், அங்கு தீவிர சிகிச்சையில் இருக்கும் தனது தாய் கலிதா ஜியாவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஏன் 17 ஆண்டுகள் லண்டனில் இருந்தார்?
ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் தாரிக் ரஹ்மான் மீது ஊழல், பணமோசடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. 2008ல் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, சிகிச்சைக்காக லண்டன் சென்ற அவர், அங்கேயே அரசியல் புகலிடம் பெற்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, தாரிக் ரஹ்மான் மீதான பல வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. இது அவர் நாடு திரும்ப வழிவகை செய்தது. வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12, 2026 அன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. கலிதா ஜியா உடல்நிலை குன்றியுள்ளதால், இந்தப் பொதுத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் பிரதமர் வேட்பாளராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சித் தலைவர்கள் பலர் தலைமறைவாக உள்ள நிலையில், தாரிக் ரஹ்மானின் வருகை BNP கட்சிக்கு மிகப்பெரிய பலத்தைத் தந்துள்ளது.
அவரது வருகை இந்தியாவுடனான உறவிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. "எங்களுக்கு டெல்லி முக்கியமல்ல, பிண்டி (பாகிஸ்தான்) முக்கியமல்ல, வங்காளதேசமே முதன்மையானது (Bangladesh First)" என்ற கொள்கையை அவர் முன்வைத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
