தெலங்கானா தொழிலதிபர் சென்னையில் கடத்தல்... சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த போலீசார்!
சென்னை வளசரவாக்கம் அருகே தெலங்கானாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரவீந்திர கவுடா (57) கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பழைய சொகுசு கார் விற்பனைத் தொழில் செய்து வந்த இவருக்கு, தொழிலில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்தவர்களின் நெருக்கடிக்கு அஞ்சி, யாரிடமும் சொல்லாமல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து தனது குடும்பத்துடன் ஆழ்வார்திருநகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார்.
முகமூடி கும்பலின் அட்டூழியம்: நேற்று மதியம் ரவீந்திர கவுடா தனது வீட்டின் வாசலில் இருசக்கர வாகனத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, நம்பர் பிளேட் இல்லாத ஒரு வெள்ளை நிற கார் அங்கு வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய முகமூடி அணிந்த மர்ம கும்பல், ரவீந்திர கவுடாவை வலுக்கட்டாயமாகத் தூக்கி காரில் போட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தது. வெளியே வந்து பார்த்த அவரது மகள் பிரசன்ன லக்ஷ்மி, தந்தை கடத்தப்பட்டதை அறிந்து பதறியடித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவல் கிடைத்தவுடன் களத்தில் இறங்கிய கோயம்பேடு காவல் ஆய்வாளர்கள் ராஜேஷ் மற்றும் ரவி தலைமையிலான தனிப்படை போலீசார், அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். கடத்தல்காரர்கள் ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்றதை உறுதி செய்த போலீசார், நவீன தொழில்நுட்ப உதவியுடன் அவர்களைப் பின்தொடர்ந்தனர். இறுதியில், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கடத்தல்காரர்கள் பதுங்கியிருப்பதை ரகசியத் தகவல் மூலம் உறுதி செய்தனர்.

அங்கு விரைந்த கோயம்பேடு தனிப்படை போலீசார், மோதி பாபு என்பவரது தலைமையிலான 6 பேர் கொண்ட கும்பலைச் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களின் பிடியில் இருந்த ரவீந்திர கவுடா எவ்விதக் காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டார். பணத் தகராறு காரணமாகவே இந்தக் கடத்தல் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உண்டா என்பது குறித்துக் கைதானவர்களிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தக் கடத்தல் சம்பவத்தில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் ஆந்திராவில் வைத்துப் பிடித்த சென்னை போலீசாரின் அதிரடி நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
