அமெரிக்க தீ விபத்தில் தெலங்கானா பெண் பொறியாளர் பலி!
அமெரிக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, கடுமையாக காயமடைந்த இந்திய வம்சாவளி பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த 24 வயதான பெண் பொறியாளர் சஹாஜா ரெட்டி உடுமாலா, கல்வி பயில மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்று, மேற்படிப்பை முடித்த பின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நியூயார்க்கின் அல்பானி பகுதியில் நண்பர்களுடன் அவர் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி காலை பணிமுடிந்து வீடு திரும்பிய சஹாஜா, தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது, காலை 11 மணியளவில் அந்தக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் உடன் வசித்த இரண்டு நண்பர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், சஹாஜா மட்டும் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அல்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, நியூயார்க்கில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுமார் 15 மணிநேரத்திற்கும் மேலான சிகிச்சையின்போதும் பலனளிக்காமல் சஹாஜா உயிரிழந்ததாக நியூயார்க் இந்திய தூதரகம் இன்று (டிசம்பர் 6) உறுதிப்படுத்தியுள்ளது. அவரது திடீர் மரணம் குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சஹாஜாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் தெலங்கானா அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
