மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு... இண்டிகோ - ஏர் இந்தியா விமானங்கள் மோதல்!
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் நடந்த இந்த விபத்து, வான்வழிப் போக்குவரத்துப் பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
நாட்டின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், இரண்டு பயணிகள் விமானங்கள் ஓடுதளப் பாதையில் மோதிக் கொண்டன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஏர் இந்தியா (AI 2732) மும்பையிலிருந்து கோவைக்குப் புறப்படத் தயாராக ஓடுதளத்தில் நின்றிருந்தது. இண்டிகோ (6E 791) ஹைதராபாத்திலிருந்து மும்பை வந்தடைந்து, பயணிகளை இறக்குவதற்காகத் தனது நிறுத்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இண்டிகோ விமானம் நகர்ந்து கொண்டிருந்தபோது, அதன் ஒரு பகுதி ஏர் இந்தியா விமானத்தின் வலது பக்க இறக்கையின் (Right Wing) மீது உரசியது. இதில் இறக்கையின் நுனிப்பகுதி சேதமடைந்தது.
விபத்தின் போது இரண்டு விமானங்களிலும் பயணிகள் இருந்ததால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது. பாதுகாப்பு கருதி உடனடியாகப் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். கோவை செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் சுமார் 4 மணி நேரக் காத்திருப்புக்குப் பின் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து இந்தியப் பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையின் (ATC) தவறான வழிகாட்டுதலா? அல்லது விமானிகளின் கவனக்குறைவா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களும் தற்போது விமான நிலையப் பணிமனையில் (Hangar) நிறுத்தப்பட்டு, அதன் உறுதித்தன்மை குறித்துப் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சமீபகாலமாக இந்திய விமான நிலையங்களில் இத்தகைய 'Ground Collision' எனப்படும் தரையில் நிகழும் மோதல்கள் அதிகரித்து வருவது பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
