பெங்களூருவில் பயங்கரம்... ஒரு வயது குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி - கடைசி நேரத்தில் தடுத்த அதிகாரிகள்!
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஹோஸ்கோட் நகருக்கு உட்பட்ட சுலிபெள்ளி கிராமத்தில், மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு பச்சிளம் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற தம்பதியிடமிருந்து குழந்தையை அதிகாரிகள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த சையது இம்ரான் மற்றும் அவரது மனைவி, சில மாதங்களுக்கு முன்பு புலம்பெயர் தொழிலாளி ஒருவரிடமிருந்து ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்தனர். ஆனால், இது சட்டப்பூர்வமாக நடக்கவில்லை. போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்து, குழந்தையின் தந்தையிடம் ரகசிய ஒப்பந்தம் போட்டு குழந்தையைத் தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர். பெளர்ணமி தினமான நேற்று முன் தினம் இரவு, அந்தக் குழந்தையை நரபலி கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணுக்கு (Childline) வந்த ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு, இம்ரான் வீட்டில் ஒரு வயது குழந்தையை நரபலி கொடுக்க ஏற்பாடுகள் நடப்பதாகத் தகவல் அளித்தது. இது குறித்த தகவலறிந்து உடனடியாகச் செயல்பட்ட அதிகாரிகள், இம்ரானின் வீட்டைத் தேடிச் சென்று அதிரடியாக நுழைந்தனர்.
அதிகாரிகள் உள்ளே சென்றபோது, வீட்டின் ஒரு அறையில் ஒரு சிறிய குழி தோண்டப்பட்டிருந்தது. அங்கு பூஜைப் பொருட்கள், ஊதுபத்திகள் மற்றும் மலர்கள் சிதறிக் கிடந்தன. புதையல் கிடைக்கும் என்ற ஆசையில், நள்ளிரவில் குழந்தையை நரபலி கொடுக்க அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது சோதனையில் உறுதியானது.

அதிகாரிகள் குழந்தையை உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். சட்டவிரோதமாகக் குழந்தையைத் தத்தெடுத்தது மற்றும் நரபலி கொடுக்க முயன்றது தொடர்பாக சையது இம்ரான் மற்றும் அவரது மனைவியிடம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
