ஈரோட்டில் பயங்கரம்.. போகிக்கு வீட்டை கொளுத்திய கணவன்... மனைவியுடன் தகராறால் ஆவேசம்!
போகி தினத்தில் "பழைய பொருட்களை எரிக்கச் சொன்னால், வீட்டையே எரிப்பதா?" என ஈரோடு மக்கள் இன்று ஒரு விசித்திரமான மற்றும் ஆபத்தான சம்பவத்தைக் கண்டு உறைந்து போயுள்ளனர். குடும்பத் தகராறில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் செய்த காரியம் அந்தப் பகுதியையே போர்க்களமாக மாற்றியது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். ஆட்டோ ஓட்டுநரான இவருக்குச் சுதா என்ற மனைவியும், 18 வயதில் ஒரு மகனும் உள்ளனர். செந்தில் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் மனமுடைந்த சுதா, "உங்களுடன் வாழப் பிடிக்கவில்லை, நான் பிரிந்து போகிறேன்" என்று கூறி வந்துள்ளார்.

இன்று போகிப் பண்டிகை என்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், செந்தில் காலையிலேயே குடித்து விட்டு வந்து சுதாவிடம் மல்லுக்கட்டியுள்ளார். தகராறு முற்றியதால், சுதா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மனைவியின் செயலால் ஆத்திரமடைந்த செந்தில், போதையின் உச்சத்தில் தனது சொந்த வீட்டின் படுக்கையறைக்குத் தீ வைத்தார். தீ மளமளவென வீடு முழுவதும் பரவி, கரும்புகை சூழ்ந்தது. அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், வீட்டிற்குள் இருந்த இரண்டு எரிவாயு சிலிண்டர்களை லாவகமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஒருவேளை சிலிண்டர் வெடித்திருந்தால் அந்தத் தெருவே தரைமட்டமாகி இருக்கும். வீட்டில் இருந்த கட்டில், பீரோ மற்றும் முக்கியப் பொருட்கள் தீயால் கருகிச் சாம்பலாகின. கருங்கல்பாளையம் போலீஸார் செந்திலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
