"சாமானிய மக்களுக்கான வெற்றிப் போர்முரசம்" - தவெக விஜய் உருக்கமான கடிதம்!

 
தவெக விஜய் தவெக விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள உற்சாகமான, உருக்கமான கடிதம் வைரலாகி வருகிறது. 

தமிழக வெற்றிக் கழகம்  இன்று தனது மூன்றாம் ஆண்டு பயணத்தைத் தொடங்குகிறது. இதனை முன்னிட்டுத் தனது தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டுள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய தனது இலக்கை மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்தியுள்ளார். தனது பதிவில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து நம் அரசியல் பெரும்பயணம் நீள்கிறது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தவெக விஜய்

கட்சியை ஒரு ஆழ்கடலுக்கும், விரிவானத்திற்கும் ஒப்பிட்டுள்ள அவர், தவெக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல, அது "சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம்" என்று வர்ணித்துள்ளார். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாமல் இலக்குகளை நோக்கித் தவெக முன்னேறும் என உறுதி அளித்துள்ளார். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து விஜய் தனது பதிவில் சில முக்கியமான கருத்துகளை முன்வைத்துள்ளார்:

2026 தேர்தல் களம் இதுவரை இல்லாத ஒரு புதிய சூழலைச் சுமந்து நிற்பதற்குத் தவெக-வின் அரசியல் வருகையே காரணம் எனப் பலரும் சொல்வதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்ந்த தெளிவுடனும், திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் களத்தை எதிர்கொண்டு, "ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை" உறுதியாக வெல்வோம் எனத் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். அனைத்துத் தரப்பு மக்களின் அமோக ஆதரவுடன் தீர்க்கமாகவும், ஒற்றுமையாகவும் களமாடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

விஜய்

முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே, மக்கள் இயக்கமாக மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம் என்பதை உலகம் அறியும் என்று குறிப்பிட்டுள்ள விஜய், "நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்" எனத் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, 2026 தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்தப் பதிவு அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!