4 மாத அச்சுறுத்தல்... நீலகிரியில் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடிய புலி கூண்டில் சிக்கியது!
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவர்சோலை பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாகப் பொதுமக்களையும் கால்நடைகளையும் அச்சுறுத்தி வந்த புலி ஒன்று, வனத்துறையினரால் வைக்கப்பட்ட கூண்டில் பிடிபட்டது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
தேவர்சோலை பகுதியில் கடந்த நான்கு மாதங்களாகப் புலி ஒன்று கிராமப் பகுதிகளுக்குள் ஊடுருவி வந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே நடமாடி வந்தனர். இந்தப் புலி, ஆடு, மாடு என சுமார் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடித் தின்றுள்ளது. புலியைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டங்களும் நடத்தினர்.

பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, கூடலூர் வனத்துறையினர் புலியைப் பிடிக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆரம்பத்தில், வனத்துறையினர் ஐந்து இடங்களில் இரும்புக் கூண்டுகளை வைத்தனர். அந்தக் கூண்டுகளில், புலிக்கு இரையாக ஆடுகளையும் கட்டி வைத்தனர்.
ஆனால், நான்கு மாதங்களாகப் புலி இந்தக் கூண்டுகளுக்குள் சிக்காமல் வனத்துறையினருக்குப் போக்குகாட்டி வந்தது. அதையடுத்து, வனத்துறையினர் கேரள மாநிலம் நெளம்பள்ளத்தில் இருந்து சுமார் 30 அடி நீளமுள்ள ராட்சத இரும்புக் கூண்டை வரவழைத்துப் புலியைப் பிடிப்பதற்காக வைத்தனர்.

இந்நிலையில், பொதுமக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வந்த புலி, நேற்று (நவம்பர் 28) இரவு, இந்த ராட்சதக் கூண்டில் சிக்கியது. புலி கூண்டில் பிடிபட்டதைக்கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், கூண்டில் சிக்கியிருந்த புலியைப் பத்திரமாக லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றனர். பின்னர், அந்தப் புலியானது கூடலூருக்கு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. நான்கு மாத அச்சுறுத்தலுக்குக் காரணமான புலி கூண்டில் பிடிபட்டதால், தேவர்சோலை பகுதி மக்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சுவிட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
