ஆற்றுப்பாலத் தடுப்புச் சுவரில் மோதி அந்தரத்தில் நின்ற பேருந்து.. நூலிழையில் உயிர் தப்பிய பக்தர்கள்!

 
பாலம் பேருந்து விபத்து

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஆற்றுப்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி, பாதியளவு அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இந்த விபத்தில், பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்துவிடாமல் தடுப்புச் சுவரில் நின்றதால், 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் பெரும் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வதற்காக மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்கினர். குருசாமி வெங்கடேஷ் தலைமையில், ஒரு பெண் பக்தர் உட்பட மொத்தம் 40 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஒரு பேருந்தில் சபரிமலைக்குத் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். பேருந்தை ராஜேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார்.

விபத்து

பேருந்து விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் வெள்ளாற்று பாலம் அருகில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநர் ராஜேஷின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வெள்ளாற்றுப் பாலத்தின் இடதுபுறத்தில் உள்ள தடுப்புச் சுவரின் மீது மோதியது.

மோதிய வேகத்தில் பேருந்து தடுப்புச் சுவரின் மீது ஏறி நின்றது. இதனால், பேருந்தின் இடதுபுறம் பாதியளவு அந்தரத்தில் தொங்கியது போன்று அபாயகரமான நிலையில் நின்றது.

இந்தச் சம்பவத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடோடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தின்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பக்தர்களை, பேருந்தின் அவசரகாலக் கதவு மற்றும் ஓட்டுநர் இருக்கை வழியாக வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக, பேருந்து தடுப்புச் சுவரில் மோதி அப்படியே நின்றுவிட்டதால், அது ஆற்றுக்குள் கவிழ்ந்து மிகப் பெரிய அசம்பாவிதம் நிகழ்வது தவிர்க்கப்பட்டது.

விபத்து

விபத்தில் 18 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த பக்தர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து, இரண்டு கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, விபத்தில் சிக்கிய பேருந்தை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!