பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அரசாணை திரும்ப பெறப்பட்டதாக முதல்வர் அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை 3 வது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17ம் தேதி அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த முடிவு, மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்தியை கட்டாயப் பாடமாக்குவதாக இருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகளான ஷிவசேனா (யு.பி.டி), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS), மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP-SP) உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மராத்தி மொழி மற்றும் அடையாளத்தை பாதிக்கும் “இந்தி திணிப்பு” என இதை விமர்சித்துள்ளனர். இதையடுத்து, 2025 ஜூன் 29ம் தேதி மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், இந்தி கட்டாயமாக்கப்பட்ட அரசாணைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் கல்வியாளருமான நரேந்திர ஜாதவ் தலைமையில் ஒரு புதிய குழு அமைக்கப்பட்டு, தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கையை மறு ஆய்வு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார். “மராத்தி மொழியும் மராத்தி மாணவர்களும் எங்களுக்கு முக்கியம். எங்கள் மொழிக் கொள்கை எப்போதும் மராத்தி மையமாக இருக்கும்,” என ஃபட்னவிஸ் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 5-ல் திட்டமிடப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணிகள் ரத்து செய்யப்பட்டன. மராத்தி மொழி ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த முடிவை வரவேற்ற போதிலும், இந்தி திணிப்புக்கு எதிரான மக்களின் ஒற்றுமையே இந்த வெற்றிக்கு காரணம் என MNS தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!