இன்று திருச்செந்தூரில் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது!

இன்று ஜூலை 1ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குழுமி உள்ளனர். திருச்செந்தூரில் யாகசாலை பூஜை நடைபெறும் இடம் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் வரும் ஜூலை 7ம் தேதி (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமி மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் வைத்து யாகசாலை பூஜை நடக்கிறது. அதேபோல், சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கோவில் ராஜகோபுரம் அருகே 8 ஆயிரம் சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த யாகசாலையில் பல்வேறு வர்ணம் பூசி, வண்ண பேப்பர் ஒட்டி, சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முருகனின் அறுபடை வீடுகள், சுவாமிகள் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. மேலும் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர யாகசாலை பகுதியில் உள்ள தூண்கள், மேல்புற சுவர்கள் முழுவதும் தங்க நிறத்திலான மிகவும் தரமான அட்டை ஒட்டப்பட்டுள்ளது. இதனால் யாகசாலை பூஜை நடைபெறும் பகுதி தங்க நிறத்தில் ஜொலிக்கிறது.
அதே போல், யாகசாலையின் நடுவே பிரமாண்டமாக 5 அடி உயரத்தில் பஞ்ச ஆசன வேதிகை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஆமை மீது 5 தலை நாகம் அமர்ந்திருப்பது போல், அதற்கு மேல் முனிவர்கள், நந்தி, சிங்கம், அலங்கார பொம்மைகள், தாமரைப்பூ அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த யாகசாலையில் மயில், நந்தி, யானை உள்பட பல்வேறு அலங்கார உருவங்களும் உள்ளன.
மகா கும்பாபிஷேக விழா இன்று ஜூலை 1ம் தேதி செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. அன்று மாலையில் முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி, 12 கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 7ம் தேதி அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜையும், காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கின்றது.
காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாசம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தங்க சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!