வேலியே பயிரை மேய்ந்த கொடுமை... இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது!
கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வந்த ஷேக் சலீம் (36), ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 32 வயது பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஷேக் சலீமுக்கும் அந்தப் பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது செல்போன் பேச்சாகத் தொடர்ந்துள்ளது.

சம்பவத்தன்று அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட ஷேக் சலீம், அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணிடம் அத்துமீறிப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கூச்சலிடவே, பயந்துபோன போலீஸ்காரர் அங்கிருந்து தப்பியோடினார்.
பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது சக ஊழியர் என்று கூடப் பார்க்காமல், போலீசார் வழக்குப் பதிவு செய்து ஷேக் சலீமை அதிரடியாகக் கைது செய்தனர்.
இந்த விவகாரம் குறித்துக் கேள்விப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அரவிந்த், காவலர் ஷேக் சலீமை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். "காவல்துறையில் இருந்து கொண்டு இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் எச்சரித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
