வெறிச்சோடிய தலைமையகம்... தேமுதிகவில் வேட்புமனு தாக்கலுக்கு ஆர்வம் காட்டாத நிர்வாகிகள்!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் சில மாவட்ட மற்றும் அடிமட்ட நிர்வாகிகளின் மந்தமான செயல்பாடுகள் பிரேமலதா விஜயகாந்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட பூத் கமிட்டி மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களில் எதிர்பார்த்த அளவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு, "நிர்வாகிகள் வேலைக்குச் சென்றுவிட்டார்கள்" என்று கூறப்பட்ட பதிலை அவர் ஏற்க மறுத்துள்ளார்.

"நீங்கள் வேலைக்குச் சென்றுவிட்டால், நாங்கள் மட்டும் என்ன வேலை இல்லாமல் இங்கே வந்திருக்கிறோமா? கட்சியில் பதவி வேண்டுமென்று மட்டும் கேட்டு வாங்குகிறீர்கள், ஆனால் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை" என்று அவர் பகிரங்கமாகச் சாடினார். இந்த அதிருப்திகளுக்கு மத்தியிலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது:
பொதுத் தொகுதிக்கு ஒரு தொகையும், தனித் தொகுதிக்கு ஒரு தொகையும் நிர்ணயிக்கப்பட்டு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தத் தயார் நிலையில் இருக்குமாறு அவர் தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கூட்டணி தொடர்பாகச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஜனவரி மாதம் முடிந்துவிட்டது, தற்போது பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி குறித்த இறுதி முடிவை விரைவில் அறிவிப்போம்" என்று அவர் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் நீடிப்பது அல்லது புதிய கூட்டணி அமைப்பது குறித்து அவர் இன்னும் தெளிவான பதிலை அளிக்கவில்லை.
கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாத நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதவியிலிருந்து அவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். "இதுவே கடைசி எச்சரிக்கையாக இருக்கட்டும்" என அவர் ஆக்ரோஷமாகப் பேசியது தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு தேமுதிகவை வலுப்படுத்தப் பிரேமலதா போராடி வரும் சூழலில், கட்சி நிர்வாகிகளின் இந்த அணுகுமுறை அவருக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
