"திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிகிறது" - முதல்வர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பேச்சு!
சென்னையில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சி மற்றும் இளைஞர்களின் வாசிப்புப் பழக்கம் குறித்துத் தனது கருத்துகளைத் மிகத் தெளிவாகவும் அதிரடியாகவும் பதிவு செய்துள்ளார். எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களை வெளியிட்டு உரையாற்றிய அவர், "திராவிட மாடல் என்றாலே சிலருக்கு எரிகிறது; அவர்களுக்கு எரிய எரிய நாம் அதைச் சொல்லிக் கொண்டே இருப்போம்" என்று ஆதிக்கவாதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.
ஆதிக்கவாதிகளுக்குத் திராவிடம் கசக்கிறது: திராவிட இயக்கம் என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல, அது ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தும் ஒரு கருத்தியல் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், "ஆதிக்கவாதிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் நம்மைப் பார்த்தால் கசப்பதற்குக் காரணம், நாம் கடைப்பிடிக்கும் சமூக நீதி தான். அன்று நீதிக்கட்சியை குழிதோண்டிப் புதைப்பேன் என்று சொன்னார்கள், ஆனால் இன்று நூறு ஆண்டுகள் கடந்தும் அதன் நீட்சியாகத் தமிழக மக்களின் பேராதரவோடு நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார். மேலும், தமிழகத்தில் அறிவுத் தீ அணையாமல் இருப்பதால்தான், இங்கே கலவரத் தீயைப் பற்ற வைக்கச் சிலரால் முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் - 30 நிமிடம் வாசியுங்கள்: இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசிய முதல்வர், "30 வினாடி ரீல்ஸ் வீடியோக்களைக் கூட முழுமையாகப் பார்க்க முடியாத அளவிற்கு இளைஞர்கள் கைபேசிக்கு அடிமையாகி வருகின்றனர். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கும் இந்த நிலையை மாற்ற வேண்டும். நல்ல விஷயங்கள் கைகூடக் காலம் எடுக்கும் (Good things take time) என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்" என்று அறிவுறுத்தினார். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வாசிப்பும் வளர்ச்சியும்: வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்திய முதலமைச்சர், புத்தகங்கள் தான் ஒரு சமூகத்தின் அறிவுத் தேடலைத் தக்கவைக்கும் என்று கூறினார். அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், அறிவுப்பூர்வமான ஒரு சமூகத்தை உருவாக்குவதே தனது அரசின் நோக்கம் என்பதையும் அவர் தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
