தப்பியோடிய ஓட்டுநர்... கார் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு!
தலைநகர் டெல்லியில் சாலை விதிகளை மதிக்காமல் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வரிசையில் பள்ளிச் சிறுமி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
டெல்லியின் நஜாஃப்கர் பகுதியில் 6 வயதான சிறுமி, தனது பாட்டியுடன் கையைப் பிடித்துக்கொண்டு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. காரின் வேகம் அதிகமாக இருந்ததால், தூக்கி வீசப்பட்ட அந்தச் சிறுமி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமியைக் காப்பாற்ற முயன்ற அவரது பாட்டிக்குக் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்தியவுடன் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காயமடைந்த பாட்டியை மீட்ட பொதுமக்கள், அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த டெல்லி போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் விபத்தை ஏற்படுத்திய காரின் பதிவு எண்ணைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பள்ளிச் சீருடையுடன் ஒரு சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சியைக் கண்டு அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியது. மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் பள்ளி நேரங்களில் வாகனங்களைக் கட்டுப்பாட்டுடன் இயக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
