"வெளிப்புறம் பளபளப்பு.. உள்ளே ஒன்றுமில்லை!" - இபிஎஸ் அதிரடிப் பேட்டி!

 
இபிஎஸ் எடப்பாடி ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த பட்ஜெட்டை ஒரு 'சொத்தை அத்திப்பழம்' என வர்ணித்தார். அத்திப்பழம் வெளியே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதைப் பிட்டுப் பார்த்தால் உள்ளே புழுக்கள் நிறைந்திருக்குமோ, அதே போன்றதுதான் இன்றைய பட்ஜெட் அறிக்கையும். மெருகூட்டப்பட்ட வார்த்தை ஜாலங்களால் ஆன இந்த அறிக்கை, தமிழக மக்களுக்குக் 'காது குத்தும்' வேலையைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை.

கடந்த 2021-ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு சதவீதத்தைக் கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. திராவிட மாடல் என்று தம்பட்டம் அடிக்கும் இந்த ஆட்சி, உண்மையில் மக்களைத் துன்புறுத்தும் ஒரு 'ஏமாற்று மாடல்' (Deceptive Model) என்பது இன்றைய வெற்று அறிவிப்புகள் மூலம் மீண்டும் அம்பலமாகியுள்ளது. மாநிலத்தின் நிதி நிலை குறித்த கவலையளிக்கும் புள்ளிவிவரங்களை எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்காக முன்வைத்தார்:

எடப்பாடி

2025-26 நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.58 லட்சம் கோடியாகக் கணிக்கப்பட்டது. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அது ரூ.2.32 லட்சம் கோடியாகக் குறைந்து, சுமார் ரூ.26,000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய வரி வருவாயில் தமிழகத்திற்குச் சேர வேண்டிய ரூ.7,000 கோடி குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதற்காகத் திமுகவின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

2025-26-ல் ரூ.1.08 லட்சம் கோடியாக இருந்த நிதிப்பற்றாக்குறை, இப்போது ரூ.1.24 லட்சம் கோடியாக எகிறியுள்ளது. 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1.22 லட்சம் கோடியாகக் காட்டப்படும் இந்தக் கடன் சுமை, திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இன்னும் அதிகரிக்கும் என்பது உறுதி.

ஸ்டாலின் எடப்பாடி

பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்கம், அரசுப் பணியிடங்கள் நிரப்புதல் போன்ற முக்கிய வாக்குறுதிகள் பற்றி பட்ஜெட்டில் எந்தத் தெளிவும் இல்லை. அரசு ஊழியர்களை ஏமாற்றியதால்தான் இன்று தமிழகம் போராட்டக்களமாக மாறியிருக்கிறது. கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் இந்த அரசு, மேலோட்டமான கவர்ச்சி அறிவிப்புகள் மூலம் மக்களைத் திசைதிருப்ப முயல்கிறது.

நிர்வாகத் திறமையற்ற திமுக அரசின் செயல்பாடுகளால் தமிழகத்தின் கடன் சுமை அதிகரிப்பதோடு, எதிர்காலத்தில் மக்கள் மீது கடுமையான வரிச்சுமை ஏற்றப்படும் அபாயமும் உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தித் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட், ஒரு விளம்பர பட்ஜெட்டே தவிர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அறிக்கை அல்ல என்பதே எதிர்க்கட்சியினரின் ஒட்டுமொத்தப் பார்வையாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!