கதறும் விவசாயிகள்... 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்.. வெள்ளத்தில் மூழ்கிய டெல்டா!
வங்கக் கடலில் நிலவிய ‘டிட்வா’ புயல் மற்றும் தொடர் கனமழை காரணமாகத் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயங்கரச் சேதம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 28ஆம் தேதி இரவு முதல் பெய்த இடைவிடாத மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மொத்தம் 2.05 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் தான் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாவட்டவாரியாகச் திருவாரூரில் சுமார் 75,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம். நாகப்பட்டினத்தில் சுமார் 60,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம். மயிலாடுதுறையில் சுமார் 55,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம். தஞ்சாவூரில் சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்.

விவசாயிகள் பல இடங்களில் வடிகால் வாய்க்கால்களைத் தூர் வாராததால் மழைநீர் வடிய முடியாமல் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
புயலின் தாக்கம் காரணமாக, நாகை, தரங்கம்பாடி, பூம்புகார், காரைக்கால் போன்ற கடலோரப் பகுதிகளில் நேற்றும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியதால், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவக் கிராமங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாகையில் நேற்று காலை வரை அதிகபட்சமாக 15.25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்த கனமழை மற்றும் புயல் தொடர்பான விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்: மயிலாடுதுறை சீர்காழி வட்டத்தில், பிரதாப் (19) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அறுந்து தொங்கிய மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கும்பகோணம் வட்டம் ஆலமன்குறிச்சியைச் சேர்ந்த ரேணுகா (20) என்பவர், நேற்று முன்தினம் அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள், டெல்டா விவசாயிகளைப் பெரும் துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
