கதறிய தந்தை... கார் விபத்தில் 4 மகன்களும் சம்பவ இடத்திலேயே பலியான கொடூரம்!
சோகத்திலேயே பெரிய சோகம் புத்திர சோகம் தான் என்பார்கள். கண் எதிரிலேயே தனது நான்கு மகன்களையும் விபத்தில் பறிகொடுத்த தந்தை கதறியழுதது காண்போரைக் கலங்க செய்தது.
துபாய்க்கு சுற்றுலாவாக தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு, கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவர் சென்றிருந்தார். இவர்கள் குடும்பத்தினர் விடுமுறையைக் கொண்டாடிவிட்டு, அபுதாபியில் இருந்து மீண்டும் துபாய்க்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. அதிவேகமாக வந்த வாகனமோ அல்லது கட்டுப்பாட்டை இழந்ததோ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோர விபத்தில் அப்துல் லத்தீப்பின் நான்கு மகன்களும் (அஷாஸ் (14), அம்மார் (12), அஸாம் (7), அயாஷ் (5)) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் பணியாற்றிய வீட்டுப் பணியாளர் புஷ்ரா (49) என்பவரும் உயிரிழந்தார்.

காயமடைந்த அப்துல் லத்தீப், அவரது மனைவி ருக்சானா மற்றும் அவர்களது ஒரே பெண் குழந்தை ஆகியோர் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமீரகச் சாலைகளில் வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்கப் போக்குவரத்துத் துறை அடிக்கடி எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களின் போது ஓட்டுநர்கள் களைப்பு காரணமாக உறங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உயிரிழந்தவர்களின் உடல்களைச் சொந்த ஊரான கோழிக்கோடுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அங்குள்ள கேரள அமைப்புகள் மற்றும் இந்தியத் தூதரகம் மேற்கொண்டு வருகின்றன. கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முக்கியத் தலைவர்கள் இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
