இந்திய அணி அபார வெற்றி... தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 2-1 என முன்னிலை!

 
இந்தியா தென்னாப்பிரிக்கா டி20

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின், 3வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தர்மசாலாவில் நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்காவைச் சுருட்டிய இந்தியா, பின்னர் அபாரமான பேட்டிங்கால் இலக்கை எளிதாக எட்டியது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலப் பிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு இந்தப் போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் (டாஸ்) வென்ற இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்தியா கிரிக்கெட்

முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஹென்ரிக்ஸ் (0), டி காக் (1), பிரவிஸ் (2) என அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகள் சரிந்ததால், தென்னாப்பிரிக்க அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், கேப்டன் ஏய்டன் மார்கரம் (61 ரன்கள்) நிதானமாக விளையாடி அணியைச் சரிவில் இருந்து மீட்டு, 100 ரன்களைக் கடக்க உதவினார். இறுதியாக, தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியத் தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவைச் சுருட்டினர். ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா

இதையடுத்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் (28 ரன்கள்) மற்றும் அபிஷேக் சர்மா (35 ரன்கள்) ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இவர்கள் இருவரும் வெறும் 4.1 ஓவர்களிலேயே 50 ரன்களைக் கடந்து அதிரடி காட்டினர். முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து சூர்யகுமார் (12) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி 15.5 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!