அடுத்த அதிர்ச்சி... ஏப்.2 முதல் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி... டிரம்ப் அறிவிப்பு!

 
டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என தெரிவித்தார்.

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி பதவியேற்றார். அப்போது முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் அவர் சர்வதேச நாடுகளை அலறவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவில் வரி வசூலிப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையின் கீழ் இந்திய பொருட்களுக்கு அதிகளவு வரி விதிக்கப்படும் எனவும் கூறி வந்தார்.

டிரம்ப்

இந்நிலையில் ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றியபோது டிரம்ப் இதனை தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், “அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். அமெரிக்காவின் உத்வேகம், பெருமை, நம்பிக்கை மற்றும் உற்சாகம் திரும்பி உள்ளது. அமெரிக்கா திரும்பி வந்துவிட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மற்றவர்கள் செய்ததை விட 43 நாட்களில் நாங்கள் அதிகமாக சாதித்துள்ளோம்.

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நீங்கள் உங்களின் பொருள்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்யவில்லையென்றால், அந்த பொருள்களுக்காக நீங்கள் ஒரு வரியை செலுத்தவேண்டியது இருக்கும். சில நேரங்களில் அது மிகப்பெரியதாக இருக்கும். பிற நாடுகள் பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு எதிராக வரிவிதித்து வருகின்றன. இப்போது நாம் அதை அவர்களுக்கு திருப்பி செய்யும் நேரம் இது.

பூமியில் உள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டாலும் நாம் பல ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகிறோம். இனிமேல் அது நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், நாம் அவற்றுக்கு வரி விதிப்போம். அது பரஸ்பரம்.

டிரம்ப்

அந்த வகையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும். அவர்கள் நம்மை அவர்களின் சந்தைகளில் இருந்து விலக்கி வைக்க பணமற்ற கட்டணங்களை செயல்படுத்தினால், நமது சந்தைகளில் இருந்து அவர்களை தள்ளி வைக்க பணமற்ற தடைகளை நாமும் உருவாக்குவோம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அறிவித்தபோது அவையில் இருந்த அவரது ஆதரவாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர். முன்னதாக டிரம்ப் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஜனநாயக கட்சி எம்.பி.யான அல் கிரீன், டிரம்பின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டார். இதனையடுத்து சபாநாயகர் ஜான்சன் அவரை அவையில் இருந்து வெளியேற உத்தரவிட்டார். அதன் பின்னரும் தொடர்ந்து கூச்சலிட்ட அல் கிரீனை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.

இதனிடையே தனது உரையின்போது உக்ரைன் போர் குறித்து பேசிய டிரம்ப், அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனக்கு கடிதம் எழுதியதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உக்ரைனில் நிலவும் காட்டுமிராண்டித்தனமான மோதலை முடிவுக்கு கொண்டுவர நான் அயராது உழைத்து வருகிறேன். ஜெலன்ஸ்கியிடம் இருந்து ஒரு முக்கியமான கடிதம் எனக்கு கிடைத்தது. அதில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கும், கனிமங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் உக்ரைன் தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி எழுதியுள்ளார்” என கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web