தமிழ்திரையுலகின் ஆளுமை... ஏவிஎம் சரவணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின் நிர்வாகியுமான ஏ.வி.எம். சரவணன் அவர்களின் மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமான ஏ.வி.எம். சரவணன் அவர்களின் உடல், இறுதி அஞ்சலிக்காக ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று, ஏ.வி.எம். சரவணன் அவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், சரவணன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், ஏவிஎம் நிறுவன நிர்வாகிகளுக்கும் அவர் ஆறுதல் கூறினார்.
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு… pic.twitter.com/pzB90zbDYU
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) December 4, 2025
ஏவிஎம் சரவணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.
புதல்வராகவும் - திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் அவர்கள். பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறன் அவர்களது “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன் அவர்கள்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்குத் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
