மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும்... ஓபிஎஸ் லாக்கப் மரணத்திற்கு கண்டனம்!

 
ஓபிஎஸ்


தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் லாக்கப் டெத் குறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில்  “ ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் ஆகியோரை மிஞ்சும் அளவுக்கு ஒரு கொடுங்கோல் ஆட்சி இந்தியாவில் நடைபெறுகிறது எனில்  அது தமிழ்நாட்டில்தான் என்று சொல்லும் அளவுக்கு வன்முறை வெறியாட்டமும், அடக்குமுறையும், சட்ட விரோதச் செயல்களும், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன. தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சத்தியவாணன்; நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன்; ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த மாணவர் மணிகண்டன்; திருநெல்வேலி மாவட்டம், ஆமீன்புரத்தைச் சேர்ந்த சுலைமான்; சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்; திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி; சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன்; மதுரை மாவட்டம், சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வேடன்; சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் என இதுவரை கிட்டத்தட்ட 25 பேர்  காவல் துறை விசாரணையில் உயிரிழந்திருக்கின்றனர். 

அஜித்
இந்நிலையில் தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ்  ஜனவரி மாதம் 14-ம் தேதி அன்று தேவதானப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகத் தெரிவித்து, அவரை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்மீது காவல் துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்தியதும், அவர் காவலர் காலில் விழுந்து கெஞ்சுவதும் அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது. இந்த சி.சி.டி.வி. காட்சி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேனி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளருக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. விசாரணை நியாயமாக நடைபெறவும், தாக்குதல் நடத்திய காவல் துறையினருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும், பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் காவல் துறையினருக்கு உண்டு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதே சமயத்தில், விசாரணை என்ற போர்வையில் கொடூரத் தாக்குதல் நடத்துவது என்பதும், இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவது என்பதும் நியாயமற்ற செயல். குற்றம் புரிந்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்குரிய தண்டனையை பெற்றுத் தருவதுதான் காவல் துறையினரின் கடமையே தவிர, அவர்களின் உயிரை பறிப்பது அல்ல. இதுபோன்ற செயல்களை காவல் துறையினர் தன்னிச்சையாக செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரிலேயே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது. 

அஜித்
கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றன. இதன்மூலம் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதே தெரியாத ஒரு நிலை உருவாகிவிட்டது. பொதுமக்கள் மீது காவல் துறையினரின் கொடூரத் தாக்குதல் என்பது கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்று வெளிவராத நிகழ்வுகள் எத்தனை என்று தெரியவில்லை. மக்களை வாழவைப்பதற்குத்தான் ஆட்சியே தவிர, மக்களின் உயிர்களை பறிப்பதற்கு அல்ல. தி.மு.க. அரசின் செயல்பாடுகள் மூலம் கொடூரக் காட்சிகள் நிறைந்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்பது நிரூபணமாகி உள்ளது. இனிமேலாவது அறநெறிப்படி ஆட்சி நடத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் எனத் தெரிவித்துள்ளார்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது