"திமுகவின் ஊழல் கோட்டை இடியும் நேரம் தொடங்கிவிட்டது!" - நயினார் நாகேந்திரன்
நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் இன்றுஅதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனை வரவேற்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராகப் பல்வேறு ஊழல் புகார்களை அவர் தனது பதிவில் பட்டியலிட்டுள்ளார். "குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம் பெற்று ரூ.1,020 கோடி ஊழல் செய்த புகாரில் அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைகளை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகாரிலும் விரைவில் உண்மை வெளிவரும். மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டும் திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடியும் நாளுக்கான 'கவுண்ட்டவுன்' இன்றோடு தொடங்கிவிட்டது. திமுகவின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆதாரங்களை அமலாக்கத்துறை ஏற்கனவே தமிழக அரசிடம் ஒப்படைத்திருந்தது. ஆனால், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யக் காலதாமதம் செய்து வந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி அமர்வு "உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்" என உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் பாஜக மட்டுமல்லாது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் அமைச்சரைத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அமைச்சருக்கு எதிரான இந்த நீதிமன்ற உத்தரவு திமுக அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
