வெனிசுலா விவகாரம்... ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசரக் கூட்டம்!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்க ராணுவம் கைது செய்து நாடு கடத்தியுள்ளது. இந்த விவகாரம் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் எனப் பல நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஐ.நா. சபை இதில் தலையிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், மதுரோவை ஒரு "போதைப்பொருள் பயங்கரவாதி" என்று தொடர்ந்து விமர்சித்து வந்தார். இந்நிலையில், மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டு நியூயார்க்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் "அமெரிக்க மண்ணில் அமெரிக்க நீதியைச் சந்திப்பார்கள்" என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்தே அமெரிக்கா இவ்வாறு செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், வெனிசுலா மக்களின் நலனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதாகவும் இந்தியா கூறியுள்ளது. வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஜி7 நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயார் என ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் அன்னலேனா பேயர்போக், நாடுகள் தங்கள் இஷ்டப்படி செயல்படக் கூடாது என்றும், ஐ.நா. சாசனத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை காலை 10 மணியளவில் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சோமாலியா, இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
"சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள்" என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது. கொலம்பியா அதிபர் பெட்ரோவின் கோரிக்கையை ஏற்று இந்த அவசரக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
