கழுத்தில் துண்டை சுற்றி வெளியே இழுத்து வந்த மனைவி... கொலையில் முடிந்த குடும்பத் தகராறு!
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அருகே, குடிபோதையில் வந்து தகராறு செய்த கணவரின் கழுத்தை துண்டால் இறுக்கிக் கொலை செய்த மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்போடை கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் (43) என்ற கார் ஓட்டுநருக்கும், துர்கா (30) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகத் துர்கா தனது கணவரைப் பிரிந்து மணிமங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பச்சையப்பன் அதிகப்படியான மது போதையில் தனது மனைவியைப் பார்ப்பதற்காக மணிமங்கலத்திற்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் பழைய கசப்பான சம்பவங்கள் குறித்துக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற துர்கா, பச்சையப்பனின் கழுத்தில் அவர் அணிந்திருந்த துண்டைப் போட்டு இறுக்கிக் கட்டியுள்ளார். மேலும், அவரை வீட்டிற்குள்ளிருந்து தரதரவென வெளியே இழுத்து வந்து தள்ளியுள்ளார். இதில் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறிய பச்சையப்பன், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது கணவர் உயிரிழந்ததை உணர்ந்த துர்கா, பதற்றமடையாமல் நேராக மங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றைக்கூறி சரணடைந்தார். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பச்சையப்பனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் வந்து தகராறு செய்த கணவரை, ஒரு பெண் ஆத்திரத்தில் கொலை செய்த இந்தச் சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து துர்காவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
