ஊர் ஊருக்கு ஒரு சுவை - 235க்கும் மேற்பட்ட வகைகள்... சென்னையில் நாளை உணவுத் திருவிழா - உதயநிதி தொடங்கி வைக்கிறார்!
சென்னையில் உள்ள உணவுப் பிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், "சென்னை உணவுத் திருவிழா 2025" நாளை (டிசம்பர் 21) கோலாகலமாகத் தொடங்குகிறது. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறவுள்ள இந்த விழாவை, நாளை மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வரும் டிசம்பர் 24-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில், பாரம்பரிய சுவைகளுடன் நவீனத் தொடுகையும் கொண்ட நூற்றுக்கணக்கான உணவு வகைகள் அணிவகுக்கக் காத்திருக்கின்றன.

இந்தத் திருவிழாவின் சிறப்பம்சமே, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் புகழ்பெற்ற உணவுகள் ஒரே இடத்தில் கிடைப்பதுதான். அரியலூரின் மொறுமொறு தோசைகள், சென்னையின் காரசாரமான ‘ஸ்ட்ரீட் புட்’, கோயம்புத்தூரின் கொங்கு மட்டன் பிரியாணி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஸ்டைல் சிக்கன் பிரியாணிகள் என நாவூறும் உணவுகள் ஏராளம். இது தவிர, தருமபுரியின் ராகி அதிரசம், ஈரோட்டின் கோதுமை கீரை போண்டா, காஞ்சிபுரம் கோயில் இட்லி மற்றும் சேலத்தின் முட்டை தட்டுவடை என 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனுக்குடன் சமைத்துப் பரிமாற 38 பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பழைய நினைவுகளில் மூழ்க விரும்புவோருக்காக, பெரம்பலூர் முத்து சோளம் உள்ளிட்ட 90-களில் புகழ்பெற்ற 30 வகையான தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. அதேபோல், ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்களுக்காகச் செங்கல்பட்டு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் குழுவினர் தயாரிக்கும் ‘எண்ணெய் இல்லா, அடுப்பில்லா’ (No Oil No Boil) உணவுகளும் இடம்பெறுகின்றன. காஞ்சிபுரத்தின் 20 வகையான முட்டை மிட்டாய்கள் மற்றும் கன்னியாகுமரியின் பலதரப்பட்ட சிப்ஸ் வகைகள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

தொடக்க நாளான நாளை மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தத் திருவிழா நடைபெறும். வரும் திங்கள் (டிச. 22) முதல் புதன் (டிச. 24) வரை மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் வருகை தரலாம். உணவோடு சேர்த்து மாலை நேரங்களில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இந்தத் திருவிழாவிற்குப் பொதுமக்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம் என்பது கூடுதல் சிறப்பு. மகளிர் சுய உதவிக் குழுவினருக்குச் சந்தைப்படுத்துதல் மற்றும் சுகாதாரமான முறையில் உணவு பரிமாறுவது குறித்த பயிற்சிகளும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக வழங்கப்பட உள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
