'பயம் என்பதே திமுகவுக்குக் கிடையாது'; 'மீண்டும் நம்ம ஆட்சி தான்!' - நடிகர் வடிவேலு அதிரடிப் பேச்சு!
தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பணி மற்றும் தி.மு.க.வின் எதிர்காலம் குறித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், எம்.பி. ஆ. ராசா, அமைச்சர் அன்பில் மகேஷ், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணத்தைக் குறித்துப் பாராட்டினார்.

"அவர் அரசியலுக்கு வந்தபின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முகத்தில் சினிமா பாணியை இப்போது பார்க்க முடியவில்லை. அவர் மக்களுக்காகக் களத்தில் இறங்கிப் பணியாற்ற ஆரம்பித்த பிறகு, அவருடைய உருவம், பேச்சு என எதுவும் சினிமாவுக்குச் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது," என்று வடிவேலு குறிப்பிட்டார். நிகழ்ச்சி நடந்தபோது மழை பெய்ததால், அங்கிருந்தவர்கள் அனைவரும் தி.மு.க. கட்சியின் கொடி நிறத்திலான குடைகளைப் பிடித்திருந்தனர்.
அதைக் குறிப்பிட்டுப் பேசிய வடிவேலு, "எங்கு பார்த்தாலும் நமது கட்சிக் கொடி தான் தெரிகிறது. இதன் மூலமே, 2026ஆம் ஆண்டு மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்பார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம், 200க்கு மேல் வருவது நமது லட்சியம்" என உற்சாகமாகத் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டது தனக்குப் பெருமை அளிப்பதாகத் தெரிவித்த வடிவேலு, அவருடைய உழைப்பைக் குறித்துப் பேசினார். "படங்களில் நடிக்கும் போது இயக்குநர் என்ன வேலை கொடுக்கிறாரோ, அதை எப்படிப் பொறுமையாக உள்வாங்கி நடந்து கொள்வாரோ, அதேபோல் தற்போது தி.மு.க. தலைமை அவருக்கு என்ன பொறுப்பு வழங்கி இருக்கிறதோ, அதனைச் சரியாக உள்வாங்கி, மக்களைத் தயார் செய்து, தனது தகுதிக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்."

அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பேரன் என்பதையும் நினைவு கூர்ந்த வடிவேலு, "நான் சினிமாவில் பார்த்த உதயநிதிக்கும், அரசியலில் பார்க்கும் உதயநிதிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இனிமேல் அவரிடம் சினிமா முகமே பார்க்க முடியாது. உழைப்பு மட்டும்தான் அவரின் பணியாக உள்ளது," என்று அழுத்தமாகக் கூறினார்.
உதயநிதி ஸ்டாலினின் உழைப்பால் மீண்டும் அவர் துணை முதல்வராக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்த வடிவேலு, மத்திய அரசைக் மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார். "அவனவன் போடும் சட்டமெல்லாம் நமக்குச் சாதகமாகத்தான் இருக்கும். மற்ற மாநிலங்களை எல்லாம் உடைக்கும் நிலையில், இங்கு எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறார்கள்; முடியவில்லை. இது மிகப்பெரிய கோட்டை" என்று தி.மு.க.வின் பலத்தைக் குறிப்பிட்டார்.
அத்துடன், "மக்கள் பணியாற்ற ஆ. ராசா, அன்பில் மகேஷ், சேகர்பாபு போன்றவர்கள் களத்தில் இறங்கிப் பணியாற்றக் கூடியவர்கள். பயம் என்பதே தி.மு.க.வுக்குக் கிடையாது," என்று வீரமாகப் பேசி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற பாடலின் சில வரிகளைப் பாடினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
