ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லை... ஆத்திரத்தில் எந்திரத்தை அடித்து நொறுக்கிய இளைஞர்!
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில், ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முயன்றபோது பணம் வராததால் ஆத்திரமடைந்த ஒரு தொழிலாளி, அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரம் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
துமகூரு மாவட்டம், துருவகெரே மெயின் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. கடந்த மாதம் (நவம்பர் 27ம் தேதி இரவில், இந்த ஏ.டி.எம். மையத்திற்கு ஒரு நபர் பணம் எடுக்க வந்துள்ளார். ஆனால், பணம் வராததால் அவர் கடுமையான ஆத்திரம் அடைந்தார். பின்னர் திடீரென்று அவர் அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரம், கண்ணாடிச் சுவர்கள் மற்றும் மையத்தில் இருந்த பிற பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். மறுநாள் காலை ஏ.டி.எம். மையத்திற்குப் பணம் எடுக்கச் சென்ற பொதுமக்கள், ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்துத் துருவகெரே போலீசாருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.முதலில் இந்தச் சம்பவத்தை மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றதாகப் போலீசார் சந்தேகித்தனர். ஆனால், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் கொள்ளை போகவில்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு (சிசிடிவி) கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றித் தீவிர ஆய்வு நடத்தினர். அப்போது, ஏ.டி.எம். மையத்திற்கு வந்த அந்த நபர், மது குடித்துவிட்டுக் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. ஏ.டி.எம். கார்டு மூலமாக அவர் பல முறை பணம் எடுக்க முயன்றும், எந்திரத்திலிருந்து பணம் வெளியே வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், குடிபோதையின் உச்சத்தில் ஏ.டி.எம். எந்திரத்தையும், அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியது சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்துத் துருவகெரே போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரைத் தேடி வந்தனர். தீவிர தேடலுக்குப் பிறகு, ஏ.டி.எம். எந்திரத்தை நொறுக்கிய வடிவேல்சாமி என்ற தொழிலாளியைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது, ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றபோது பணம் வராததால்தான், தான் குடிபோதையில் எந்திரத்தை உடைத்துவிட்டதாக வடிவேல்சாமி வாக்குமூலம் அளித்தார். விசாரணையை முடித்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். பணம் வராததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஏற்பட்ட இந்தச் சேதம், அந்தத் தொழிலாளிக்குச் சிறைத் தண்டனையைப் பரிசாகக் கொடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
