“2026 தேர்தலில் விசிக இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் கிடையாது” மீண்டும் பரபரப்பை பற்ற வைத்த திருமாவளன்!

தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில் விடுதலை சிறுத்தைக்கள் கட்சி இல்லாமல் எந்தவொரு அரசியல் நகர்வும் கிடையாது என்று பேசி மீண்டும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் திருமாவளவன்.
ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருந்து விசிக பிரியுமா, நடிகர் விஜய்யின் தவெக கூட்டணியில் விசிக இணையுமா? என்று பல்வேறு ஆருடங்கள் நடந்து வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் திமுக மீதான குற்றச்சாட்டுக்களும், உதயநிதியின் துணை முதல்வர் பதவி குறித்த பேச்சுக்களும் ஆளுங்கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. கூட்டணியில் இருந்துக் கொண்டே திமுகவின் நடவடிக்கைகளை விமர்சிப்பதாக சர்ச்சைகள் கிளம்பியது. அதன் பின்னர் அவர் கட்சியிலிருந்து விலக்கப்பட்டு விஜய் கட்சியில் சேர்ந்ததெல்லாம் தனிக்கதை. தற்போது மீண்டும் திருமா சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பூமி நத்தம் பகுதியில் கடந்த 24 ஆம் தேதி பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பங்களை திருமா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் நிதியையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “35 ஆண்டுகால உழைப்பால், மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாய் மாறி இருக்கிறோம். சிலபேர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து விட்டு, பொருளை தேடி, சுகத்தை தேடி, சொத்தை சேர்த்து, இளமை காலத்தை எல்லாம் சொகுசாய் வாழ்ந்து, சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள். சினிமாவின் மூலம் நல்ல சம்பாதித்து விட்டு, வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, அரசியலுக்கு வருகிறார்கள். அவர்கள் இதுபோன்று ஊர் ஊராய் சென்று பேசத் தேவையில்லை உடனே கட்சிக்கு தொடங்கலாம் ஆட்சி அதிகாரத்தையும் பெறலாம்.
ஆனால் நான் கடந்த 35 ஆண்டுகளாக வாழ்க்கையை முழுமையாக தொலைத்து தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல் எனது இளமை முழுவதையும் இழந்து தானா இந்த இடத்தை எட்டிப்பிடிக்க முடிந்தது. மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கு, இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்து தான், வாழ்க்கையை தொலைத்து தான், இந்த இடத்தை எட்டிப்பிடிக்க முடிந்தது.
டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் போன்ற தலைவர்களின் கொள்கை பிடிப்பு இருக்கிறது. கொள்கையில் தெளிவு இருப்பதால் எந்த கொம்பனாலும் என்னை விலைக்கி வாங்க முடியாது. நான் ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால் என்றோ இந்த கட்சிக்கு அங்கீகாரம் பெற்றிருப்பேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. இது காலத்தின் கட்டளை. இதனை அரசியல் வல்லுநர்களே ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!