கோவில் நகைகளைக் கொள்ளையடித்த திருடன்... பாலத்தில் இருந்து குதித்ததால் மாவுக்கட்டு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோவிலில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளி சுந்தரேசனை போலீசார் கைது செய்தனர். ஆனால், அவரிடம் திருட்டு நகைகளை மீட்கச் சென்றபோது, போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற அந்த கொள்ளையன் பாலத்தில் இருந்து குதித்ததால், காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜபாளையம் மலையடிப்பட்டி சவுந்திரபாண்டியன் நகரில் உள்ள பூமாறியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து சில நாட்களுக்கு முன் கொள்ளை நடந்தது. உண்டியலில் இருந்த பணம் மற்றும் அம்மன் நகைகள் திருடு போனது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பிரதான குற்றவாளியான தெற்கு மலையடிப்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்த சுந்தரேசன் (31) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

சுந்தரேசன் சஞ்சீவி மலைப் பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, தலைமறைவாக இருந்த சுந்தரேசனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
சுந்தரேசனிடம் இருந்து கொள்ளையடித்த நகைகளை மீட்பதற்காக போலீசார் அவரை அயன்கொல்லங்கொண்டான் பாலம் அருகே அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத சுந்தரேசன், போலீஸாரிடமிருந்து தப்பிப்பதற்காகப் பாலத்தில் இருந்து கீழே குதித்து ஓட முயன்றார். ஆனால், கீழே குதித்த வேகத்தில் அவருக்குக் காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீஸார், அவருக்குக் காலில் மாவுக்கட்டு போட்டுச் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரிடம் இருந்து 4 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளிக் கொலுசுகளைப் போலீஸார் மீட்டனர். சுந்தரேசன் மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
