"பண பலத்தால் வீழ்த்தப்பட்டேன்"... திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா !
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டுள்ளார். மீதமுள்ள 3 தொகுதிகள் கூட்டணிக் கட்சியான பாரதிய கூர்கா பிரஜாதாந்திரிக் மோர்ச்சாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மமதா பானர்ஜி மீண்டும் தனது ஆஸ்தான தொகுதியான பவானிபூரில் களம் காண்கிறார்.
இந்த வேட்பாளர் பட்டியலில் தற்போதைய எம்.எல்.ஏ-க்களாக இருக்கும் 74 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஜல்பைகுரி மாவட்டம் ராஜ்கன்ச் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மூத்த தலைவர் ககேஸ்வர் ராய் புறக்கணிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இந்தியத் தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தியடைந்த ககேஸ்வர் ராய், தனது எம்.எல்.ஏ பதவியையும் மாவட்டத் தலைவர் பொறுப்பையும் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா குறித்துப் பேசிய ககேஸ்வர் ராய், "கட்சி தொடங்கிய காலம் முதல் மமதாவுடன் பயணித்த என்னைப் பண பலம் மற்றும் அதிகாரம் இன்று தோற்கடித்துள்ளது" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். வேட்பாளர் தேர்வில் புதுமுகங்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் மமதா முன்னுரிமை அளித்துள்ள நிலையில், மூத்த நிர்வாகிகள் வெளியேறுவது தேர்தலுக்கு முன்னதாகக் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், இந்த உட்கட்சிப் பூசல் தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
