’கள்' விவகாரத்தை வைத்து திமுகவை விமர்சிக்கலாமே தவிர அது மக்கள் நலன் சார்ந்தது அல்ல ... திருமா கடும் கண்டனம்!

நாம் தமிழர் கட்சியின் உழவர் பேரவை சார்பில் ஜூன் 15ம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனை மரத்தில் ஏறிக் கள் இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. கள் என்பது உணவு, டாஸ்மாக்கில் மது பானம் விற்பதற்கு அனுமதி கொடுக்கும் அரசு கள் இறக்குவதற்கு ஏன் அனுமதி தரமறுக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., "கள்' உணவுப் பொருள் என்ற வாதம் வைக்கப்படுகிறது. 'கள்' அருந்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற பரப்புரையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 'கள்' என்ற சொல்லுக்கே போதை என்றுதான் பொருள். மது என்றாலும் 'கள்' என்றாலும் ஒன்றுதான். 'கள்' இறக்கும் தொழிலாளர்களின் நலனுக்காகப் பேசுவது என்றதன் பேரில் நாம் போதைப் பொருள் பயன்பாட்டை வலியுறுத்துவது ஏற்புடையது அல்ல. விசிக மது மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.
திமுகவினை எதிர்க்கும் மன நிலையில் 'கள்' தொடர்பான பிரச்சனைகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர். 'கள்' இறக்கும் தொழிலாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் எனில் அவர்களுக்கு மாற்றுத் தொழில் வழங்குவது குறித்துச் சிந்திக்க வேண்டும். அவர்கள் 'கள்' இறக்கும் தொழிலாளர்கள் என்பதால் மீண்டும் அவர்களுக்கு 'கள்' இறக்கும் தொழிலைச் செய்ய வசதி ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமில்லை. நம்மிடம் இருக்கும் பணை மற்றும் தென்னை மரத்தைப் பயன்படுத்தி நாம் எவ்வளவுதான் 'கள்' உற்பத்தி செய்தாலும் கூட, அது நமது தேவைக்கு போதுமானதாக இருக்காது. ஆகையால் கலப்படம் செய்தால் மட்டுமே தேவைக்கு ஏற்ப 'கள்' கொடுக்க முடியும். கலப்படத்தில் அதிக அளவில் நச்சு பொருட்கள்தான் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள். இது வெறும் யூகமல்ல.
நடைமுறை சாத்தியங்களை நாம் ஆய்வு செய்து பார்த்தால், நம்மிடம் இருக்கும் அனைத்து மரத்திலும் 24 மணி நேரமும் 365 நாட்களும் 'கள்' மட்டுமே இறக்கினால் கூட நம்முடைய தேவைக்கு போதுமானதாக இருக்காது. மரம் காய்க்க வேண்டும் என்று விரும்புவார்கள் வருடம் முழுவதும் 'கள்' இறக்க அனுமதிக்க மாட்டார்கள் ஒரு வருடம் 'கள்' இறக்கினால் அடுத்த வருடம் காய்ப்பதற்காக ஏற்பாடு செய்வார்கள். இந்த நிலையில் 'கள்' விவகாரத்தை வைத்து திமுகவை, அதன் ஆட்சியையும் விமர்சிக்கப் பயன்படுத்தலாமே தவிர, உண்மையில் மக்கள் நலம் சார்ந்த கோரிக்கை அல்ல" எனக் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!