திருப்பரங்குன்றம் தீப விவகாரம்... எம்.பி.ஏ. பட்டதாரி, போலீஸ் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்தது தற்கொலை!
மதுரை மாநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், இளைஞர் ஒருவர் காவல் உதவி மையத்திற்குள் (Police Booth) புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் (40) என்ற எம்.பி.ஏ பட்டதாரி, மருந்து விற்பனைப் பிரதிநிதியாகவும், பகுதிநேரப் பழ வியாபாரியாகவும் பணியாற்றி வந்தார். தீவிர முருக பக்தரான இவர், இன்று மதியம் மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை பகுதியில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்குள்ள போலீஸ் பூத்திற்குள் திடீரெனப் புகுந்துள்ளார்.

உள்ளே சென்ற வேகத்தில் கதவைப் பூட்டிய பூர்ண சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். போலீஸ் பூத்திற்குள் இருந்து பயங்கர அலறல் சத்தத்துடன் கரும்புகை வெளியேறுவதைக் கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த மாநகராட்சி துணை மேயர் மற்றும் பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பூர்ண சந்திரன் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இந்தத் தற்கொலை குறித்துத் தல்லாகுளம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உருக்கமான பின்னணி வெளியாகி உள்ளது. பூர்ண சந்திரனின் செல்போனை ஆய்வு செய்தபோது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கும் திமுக அரசைக் கண்டித்து உயிரை விடுகிறேன்" என்ற ரீதியிலான தகவல்கள் அவரது செல்போனில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன. முருக பக்தரின் இந்த அதிரடித் தற்கொலை முடிவு மதுரையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கத் தல்லாகுளம் மற்றும் அரசு மருத்துவமனை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
