திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண்.. ஆய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறை!
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை நிலவி வரும் நிலையில், அந்த மலை உச்சியில் உள்ள தீபத்தூணை தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு இன்று (டிசம்பர் 10) ஆய்வு மேற்கொண்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இந்தக் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி தமிழகக் காவல்துறை போதிய முன்னேற்பாடுகளைச் செய்யாததால், மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் உட்பட 10 பேர் தீபம் ஏற்றவும், அவர்களுக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டது. இருப்பினும், போலீசார் மனுதாரரை மலையேற அனுமதிக்கவில்லை. தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி, தமிழகத் தலைமைச் செயலர் மற்றும் காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் (ADGP) ஆகியோர் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி காணொலி மூலம் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று (டிசம்பர் 9) உத்தரவிட்டார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணின் அமைப்பு, அதன் பாதுகாப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் குறித்து அறிவதற்காகத் தொல்லியல் துறை குழு இன்று காலை 9 மணிக்குத் தொடங்கி 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வை மேற்கொண்டது. தேவையான தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
