தினம் ஒரு திருப்பாவை ... பாசுரம் 12!
மார்கழி 12... தினம் ஒரு திருப்பாவை பாசுரம் :12
குளிரிலும் கூட்டு பக்தி:
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பொருள் விளக்கம்:
பசியால் தவிக்கும் கன்றுகளை நினைத்து எருமைகள் பாலை தாராளமாக சொரிகின்றன. அவை அங்கும் இங்கும் அலைந்து செல்ல, இல்லங்களின் வாசல்கள் பால் சேறாக மாறுகின்றன. இப்படிப் பால் பொழியும் எருமைகளுக்குச் சொந்தமான ஆயனின் தங்கையே என தோழிகள் அவளை அழைக்கிறார்கள்.
கொட்டும் பனி தலையில் விழுந்தபடியே அவள் வீட்டு வாசலில் அனைவரும் காத்திருக்கிறார்கள். சீதையை கவர்ந்த ராவணனை அழிக்க ராமராக அவதரித்த நாராயணனின் பெருமையை பாடி மனம் உருகுகின்றனர். குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தியோடு நின்று பாடல் ஒலிக்கிறது.
எல்லா வீடுகளிலும் மக்கள் எழுந்துவிட்ட நிலையில், நீ மட்டும் ஏன் இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாய் என தோழிகள் கேட்கிறார்கள். பேசாமலும் அசையாமலும் இருக்கும் இந்த பேருறக்கம் ஏன் என வியப்புடன் அழைக்கிறார்கள். எழுந்து வந்து பக்தியில் இணைந்தால் தான் அருள் கிடைக்கும் என நினைவூட்டுகிறார்கள்.

எருமைகள் சொரிந்த பால் இல்லத்தின் வாசலை சேறாக்கி விட்டதால், தோழிகள் வீட்டுக்குள் கூட நுழைய முடியாத நிலை. அதனால் வாசலிலுள்ள கட்டையைப் பிடித்துக் கொண்டு, உறங்கும் தோழியை எழுப்ப முயல்கிறார்கள். தலையில் பனி விழ, குளிரை பொருட்படுத்தாமல் அவர்கள் காத்து நிற்கிறார்கள்.
மார்கழி குளிரில் எழுந்து, வெந்நீரில் குளிப்பவர்களுக்கு இவர்களின் கஷ்டம் புரிய வேண்டும். கீழே பால் வெள்ளத்தின் குளிர்ச்சி. மேலே பனியின் கடும் குளிர்ச்சி. இத்தனை துன்பங்களையும் தாண்டி, இறைவனை அடையவே அவர்கள் முயல்கிறார்கள்.
யாரையும் விட்டுவிடாமல், எல்லாரும் சேர்ந்து இறைவனின் திருப்பாதம் அடைய வேண்டும் என்பதே இந்தப் பாடல் சொல்லும் கருத்து. தனிப்பட்ட பக்தி அல்ல, கூட்டுப் பக்திதான் முழுமையான அருளை தரும் என்ற உண்மை இங்கே அழகாக வெளிப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
