தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி... கதறும் தாய்!
திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் ஊராட்சியில், மனதைக் கசக்கும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கைவண்டூரைச் சேர்ந்த சுமதி என்பவருக்கு ஆந்திராவைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், சுமதியின் கண் பார்வைக் குறைபாட்டை மறைத்துத் திருமணம் செய்ததாகக் கூறி, அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோதே கணவர் பிரிந்து சென்றுவிட்டார். அன்றிலிருந்து தனது இரண்டு வயது பெண் குழந்தையான யாஷிகாவை, கண் இமை போலப் போற்றி வளர்த்து வந்துள்ளார் இந்தப் பார்வைத் திறன் குறைந்த தாய்.

இந்நிலையில், நேற்று வீட்டில் சுமதி வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சிறுமி யாஷிகா அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் நீரை எடுத்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் தடுமாறி அந்தத் தொட்டிக்குள்ளேயே குழந்தை விழுந்துவிட்டது. தண்ணீரில் தத்தளித்த குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, பதறியபடி ஓடிவந்த சுமதி, தனது பார்வைக் குறைபாட்டால் குழந்தையை உடனடியாக மீட்க முடியாமல் திகைத்துக் கூச்சலிட்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, தொட்டிக்குள் மூழ்கிக் கிடந்த குழந்தையை மீட்டுத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்ததைக் கேட்டு அந்தத் தாய் நிலைகுலைந்து போனார். தனக்கு இருந்த ஒரே பிடிமானமான குழந்தையும் கண் முன்னே பறிபோனதை எண்ணி அந்தத் தாய் கதறுவது அப்பகுதி மக்கள் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
