முடிவுக்கு வந்தது 3 வருட போர் பதற்றம்... அமெரிக்காவின் தலையீட்டால் உக்ரைனுடன் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா ஏற்பு?!

அமெரிக்காவின் தலையீட்டால் உக்ரைன் - ரஷ்யா இடையிலான 3 வருட போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது
கடந்த 3 வருடங்களாக ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தீவிரம் காட்டி வருகிறார். அதே நேரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ராணுவ உதவிகளுக்கு ஈடாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கடந்த மாதம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது உலக நாடுகளைப் பரபரப்புக்குள்ளாக்கியது. இது உக்ரைன் - ரஷ்யா போரை மேலும் தீவிரமடைய செய்யும் என்று பதற செய்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவிகள் அனைத்தையும் அமெரிக்கா நிறுத்தியது.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்தார். அதன்படி சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா-உக்ரைன் இடையே வெளியுறவு மந்திரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முடிந்த பின் அமெரிக்கா-உக்ரைன் கூட்டு அறிக்கையை வெளியிட்டது.
அதில், "அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் போர் நிறுத்தத்தை உடனடியாக ஏற்க உக்ரைன் தயாராக இருக்கிறது. இந்த போர் நிறுத்த காலம் இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்பந்தத்தால் நீட்டிக்கப்படலாம். இது ரஷ்ய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே அமலுக்கு வரும்" என கூறப்பட்டது.
இதனிடையே இந்த 30 நாள் போர் நிறுத்தம் திட்டத்திற்கு உக்ரைன் ஒப்புக்கொண்டாலும், ரஷ்யா அந்த திட்டத்தை இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும், இந்தத் திட்டம் குறித்து அமெரிக்காவிடமிருந்து விளக்கத்திற்காக காத்திருப்பதாகவும் ரஷ்யா தரப்பில் கூறப்பட்டது. புதின்- டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் ரஷ்யாவும் உடன்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் புதின் இதனை ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வந்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் தலையீட்டினால் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!