திருவண்ணாமலை மகா தீபம்.. பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா!

 
திருவண்ணாமலை பூத வாகனம் சந்திரசேகரர்

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் உற்சவத்தில், விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம்பாளுடன் சந்திரசேகரர் பூத வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அத்துடன், கோவிலில் நடைபெற்ற 1008 சங்காபிஷேக நிகழ்விலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இரண்டாம் நாள் உற்சவம்: விழாவின் இரண்டாம் நாள், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், பராசக்தி அம்மன் ஆகியோர் வெள்ளி விமானங்களிலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வெள்ளி இந்திர வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவண்ணாமலை

விழாவின் மூன்றாம் நாளான நேற்று விநாயகரும், அம்பாளுடன் சந்திரசேகரரும் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர், ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்திற்கு வந்தனர்.

அங்கிருந்து மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் எழுந்தருளினர். அங்குச் சாமிக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியைத் தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க, விநாயகரும், அதனைப் பின்தொடர்ந்து சந்திரசேகரரும் கோவிலில் இருந்து புறப்பட்டு, பக்தர்களின் வெள்ளத்தில் மாடவீதிகளைச் சுற்றி வலம் வந்து அருள்பாலித்தனர். மாடவீதிகளில் வசிக்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

முருகர் திருவண்ணாமலை

மூன்றாம் நாள் விழாவையொட்டி, கோவிலில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டுச் சிறப்பு யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. இந்த யாகத்தைத் தொடர்ந்து காலையில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்த ஆன்மீக நிகழ்விலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும், மூன்றாம் நாள் விழாவின்போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காகக் கோவில் கொடிமரம் அருகில் பிரார்த்தனை உண்டியல் வைக்கப்பட்டது. இதில் நகர முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பலர் காணிக்கை செலுத்தினர்.

இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில், பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளைச் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!