TNPSC குரூப்-2 தேர்வு ரத்து... தவெக தலைவர் விஜய் கண்டனம்!
சுமார் 9,000-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதவிருந்த டிஎன்பிஎஸ்சி முக்கியமான தேர்வு, கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் மாநிலம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் (Mains Exam) தொடங்கவிருந்தன. ஆனால், தேர்வு மையங்களை ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் குழப்பம் வெடித்தது:
சென்னையில் உள்ள அரும்பாக்கம் மற்றும் நந்தனம் மையங்களில் தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட பதிவு எண்கள் தவறாக இருந்தன. 300 பேர் அமர வேண்டிய மையத்தில் 1,000 பேர் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தேர்வர்கள் அரும்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 600-க்கும் மேற்பட்ட தேர்வர்களுக்குத் தவறான மையங்கள் ஒதுக்கப்பட்டதை ஒப்புக் கொண்ட TNPSC, காலை மற்றும் பிற்பகல் என இரண்டு நேரத் தேர்வுகளையும் ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜய், திமுக அரசை "வெற்று விளம்பர மாடல் அரசு" எனச் சாடியுள்ளார்.

அவரது அறிக்கையில், "அரசுப் பணி என்பது இளைஞர்களின் லட்சியம். பல ஆண்டுகளாகப் படித்து வந்தவர்களின் நம்பிக்கையை இந்த அரசு சிதைத்துவிட்டது. தேர்வு ரத்து செய்யப்பட்டது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கனவே நகராட்சித் துறை தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ள நிலையில், இந்த ரத்தின் பின்னணியில் ஏதேனும் மிகப் பெரிய முறைகேடு மறைக்கப்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது. "வரும் தேர்தலில் தமிழக இளைஞர் பட்டாளம் இந்த அரசுக்கு ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டும்."
விஜய்யைத் தவிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் இச்சம்பவத்திற்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இது திமுக அரசின் 'நிர்வாகத் தோல்வி' என அவர்கள் விமர்சித்துள்ளனர்.

புதிய தேர்வு தேதிகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வுத் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே எஸ்.எம்.எஸ் (SMS) மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய ஹால் டிக்கெட்டுகள் குறித்த விபரங்கள் அனுப்பப்படும். இந்த மென்பொருள் குளறுபடி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தேர்வுக்காக நெடுந்தூரம் பயணம் செய்து வந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், இந்தத் திடீர் ரத்தால் பெரும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
