இன்று ஏழைகளின் இதயக்கனி எம்ஜிஆர் நினைவு நாள்.. டிச.24ல் என்ன நடந்தது? எம்.ஜி.ஆரின் கடைசி நிகழ்ச்சி இது தான்!
இன்று ஏழைகளின் இதயக்கனி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாள். இன்றளவிலும் எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தமாக தான் ஏழைகளின் இதயத்தில் வாழ்ந்து இருக்கிறார். 200 ரூபாய் கொடுத்து கூட்டிய கூட்டமல்ல அது.
தமிழகத்தில் 1987 ல் சென்னையில் கத்திப்பாரா சந்திப்பில் நேரு சிலை திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டார் எம்ஜிஆர். 2 நாட்களுக்கு பிறகு, மருத்துவ பல்கலைக்கழக தொடக்க விழா நடைபெறுவதாக இருந்தது. டிசம்பர் 23ம் தேதி இரவில் ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் வழக்கம் போல் எம்.ஜி.ஆர். படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இரவு 12.30 க்கு “பாத்ரூம்” சென்று வந்த பிறகு நெஞ்சு வலிக்கிறது எனக் கூறினார். சிறிது தண்ணீர் கொடுக்கப்பட்டது. தண்ணீரை வாங்கிக் குடித்ததும் மயக்கம் அடைந்தார்.

இது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதும் மருத்துவர்கள் விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர். மீண்டும் இதயத்துடிப்பு வர பல உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. “திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் எம்.ஜி.ஆர். மறைந்து விட்டார்” என அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் குழு அறிவித்தனர். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அதிர்ச்சியால் மயக்கம் அடைந்தார்.
கோவையில் சுற்றுப் பயணம் முடித்து விட்டு காலை 5.45 மணிக்கு ரயில் மூலம் சென்னை வந்து சேர்ந்த கருணாநிதி, எம். ஜி.ஆர். மரணச்செய்தி அறிந்து நேரடியாக ராமாவரம் தோட்டத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
காலை 8.40 க்கு ராமாவரத்தில் இருந்து பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி மண்டபத்தில் 6 அடி உயர மேடை அமைக்கப்பட்டு அதில் எம்.ஜி.ஆர். உடல் வைக்கப்பட்டது.
லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வெளியே வந்தனர். நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராக பதவி ஏற்றார். ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம். ஆண்களும், பெண்களும் நீண்ட “கியூ” வரிசையில் 4 மைல் தூரத்திற்கு கால்கடுக்க உணவும் தண்ணியும் இல்லாமல் காத்து கிடந்தனர்.

தமிழகம் முழுவதும் வாகன மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு வார காலம் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, “இந்தியாவின் ஒற்றுமையைப் புனிதமாக கருதியவர் எம்.ஜிஆர். அவர் கடைசியாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி என் தாத்தா நேருவின் சிலை திறப்பு விழா ஆகும். என் குடும்பத்தின் 3 தலைமுறையினருடன் அவருக்கு உள்ள தொடர்பை எடுத்துக் கூறினார். அது அவரது விடைபெறு நிகழ்ச்சி என்று எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது” என கண் கலங்கினார்.
“ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் இதய பூர்வமாக நேசித்த என் ஆருயிர் நண்பர் மறைவு செய்தி கேட்டு அதிர்ந்து போய் இருக்கிறேன். எத்தனையோ சோதனைகள் குறுக்கிட்ட போதிலும் எங்களது நட்புணர்வு பட்டுப்போனதே இல்லை. மக்கள் அனைவரும் அமைதியாகவும், கசப்பு உணர்வு, காழ்ப்புணர்ச்சிகளை தவிர்த்தும், ஒற்றுமையை கட்டி காப்பதற்கும் உறுதி மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி தெரிவித்தார்.
தமிழீழப் போராட்டத்தில் அவர் காட்டிய அக்கறையும், குறிப்பாக அவர் என் மீது கொண்டிருந்த அன்பையும், எமது இயக்கத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது என விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது அஞ்சல் குறிப்பில் தெரிவித்திருந்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
