இன்று உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சந்தன படிகளைதல்... 32 வகையான அபிஷேகங்கள் - 1000 போலீசார் பாதுகாப்பு!"
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அபூர்வக் காட்சியாக உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சந்தனம் படிகளைதல் இன்று தொடங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உலகப்புகழ் பெற்ற ஆருத்ரா தரிசன விழா இன்று ஜனவரி 2ம் தேதி நடைபெற உள்ளது. இக்கோயிலில் உள்ள அபூர்வ பச்சை மரகத நடராஜரின் சந்தனம் களையப்படும் நிகழ்வு பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகோசமங்கை கோயிலில் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்த பச்சை மரகத நடராஜர் சிலைக்கு, ஒளி மற்றும் ஒலியால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு இடப்பட்டிருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்தச் சந்தனம் களையப்பட்டு, மரகத மேனியுடன் நடராஜரைத் தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்குக் கிடைக்கும்.

இன்று காலை 8:30 மணிக்கு சந்தனம் படிகளைதல் தொடங்கும். சந்தனம் களையப்பட்ட பிறகு இன்று முழுவதும் 32 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெறும். நாளை ஜனவரி 3 அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள் மகா அபிஷேகம் முடிந்தவுடன், மீண்டும் புதிய சந்தனக் காப்பு இடப்படும். அதன் பின்னரே பக்தர்கள் மீண்டும் தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சந்தீஷ் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: உள்ளூர் போலீசார், ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் வளாகம் முழுவதும் 36 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். இதற்காகத் தற்காலிகக் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தற்காலிகப் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

உத்தரகோசமங்கை சந்திப்பு முதல் கோயில் வரை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. உத்தரகோசமங்கை சந்திப்பு வழியாக வரலாம். கீழக்கரை, சாயல்குடி மக்கள் திருப்புல்லாணி சந்திப்பு வழியாக வரலாம். கனரக வாகனங்கள் (வேன், பஸ்) புத்தேந்தல் சந்திப்பு வழியாக மட்டுமே வர வேண்டும். திரும்பச் செல்லும்போது களரி, திருப்புல்லாணி சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும். வாகனங்களை நிறுத்தத் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அபூர்வ மரகத நடராஜர் தரிசனத்திற்குச் செல்லத் திட்டமிடும் பக்தர்கள், போலி சந்தனம் விற்பவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், வி.ஐ.பி பாஸ்களை முறையாகப் பயன்படுத்தவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
