கோவையில் சோகம்... முள்வேலியில் சிக்கி பெண் சிறுத்தை உயிரிழப்பு!
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவகரை பகுதியில், முன்வேலியில் சிக்கி பெண் சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
நவகரை பிரிவு, மோதமதி செக்ஷன், பொலுவாம்பட்டி பிளாக் வனப்பகுதிக்கு அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில், நேற்று வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சுமார் 4 முதல் 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று, தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பழைய முள்வேலியைக்கடக்க முயன்றுள்ளது.
முள்வேலியைக் கடக்கும் போது எதிர்பாராத விதமாகச் சிறுத்தையின் உடல் கம்பிகளுக்கிடையே சிக்கிக் கொண்டது. அதிலிருந்து விடுபடச் சிறுத்தை நீண்ட நேரம் போராடியுள்ளது. இதில் முள்வேலி கம்பிகள் சிறுத்தையின் உடலில் ஆழமாகப் பதிந்து கடுமையான காயங்களையும், உட்புற ரத்தக் கசிவையும் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
இன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்றவர்கள் சிறுத்தை சிக்கிக் கிடப்பதைக் கண்டு வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். மதுக்கரை வனச்சரக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள்ளாகவே அந்தப் பெண் சிறுத்தை உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டது.
உயிரிழந்த சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே சிறுத்தையின் இறப்பிற்கான துல்லியமான காரணம் தெரியவரும். வன எல்லைக்கு மிக அருகில் (சுமார் 500 மீட்டர் தொலைவில்) இத்தகைய ஆபத்தான முள்வேலிகள் அமைக்கப்பட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வன விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் வேலி அமைத்திருந்தால் தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
சமீபகாலமாக மேற்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களில் மனித-விலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறும் விலங்குகள் இது போன்ற வேலிகளில் சிக்கி உயிரிழப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
